Loading . . .




தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக சிறப்பு ஆய்வு கூட்டம்.. மின்சாரத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு , கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப,

The Forecast 2 years ago மின்சார துறை

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்  நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு மின் பராமரிப்பு பணிகள், பழுதடைந்த மற்றும் சாய்வான மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல், புதிதாக நிறுவப்பட வேண்டிய பில்லர் பெட்டிகள், மழைகாலத்தின் போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகளை உயர்த்துதல், மற்றும் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மின் விநியோக தொடர்பான பணிகள் குறித்து அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வினை  மேற்கொண்டார்.

இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு அலுவலரிடமும் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்  அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.  பொதுமக்களிடமிருந்து மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்,  தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளுமாறும் அனைத்து அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களிடமும் நேரடியாக அவர்களுடைய பிரிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும், வரப்பெற்ற புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராவண்ணம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு, எதிர் வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர் கொள்வதற்கும், மழைக்காலங்களின் போது சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும் தேவையான மின்பராமரிப்பு பணிகளான உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க இடைச்செருகலாக புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டிகளில் பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இதற்கான களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உயரழுத்த (11,623 எண்ணம்) மற்றும் தாழ்வழுத்த (31,621 எண்ணம்) மின்பாதைகளில் மாற்றப்பட வேண்டிய பழுதடைந்த மின்கம்பங்கள், சரி செய்யப்பட வேண்டிய தாழ்வாக உள்ள மின்கம்பிகள் (20,570 இடங்களில்), மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க இடைச்செருகலாக புதிதாக நிறுவப்பட வேண்டிய மின்கம்பங்கள் (5734 உயரழுத்தம் மற்றும் 11,025 தாழ்வழுத்தம்) என பல்வேறு வகையான பணிகள் 3,89,186 எண்ணம் என கணக்கிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  எனவே, மேற்கூறிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது முறையான திட்டமிடலுடன், பொதுமக்களுக்கு உரிய முறையில் முன் அறிவிப்புகள் செய்து, அதிக நேரம் மின்தடை ஏற்படாமலும் பணிகளை மேற்கொள்ள  அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது எனவும், மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீர் இணைப்புகள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் வளாகங்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கண்ட ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும், பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” ஒன்றினை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் நடத்திட  அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) .விஷு மஹாஜன், இ.ஆ.ப, மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்)                                இரா.மணிவண்ணன்,  இயக்குநர்கள், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

மின்சார துறை Relateted News