Loading . . .




சமூக நீதியை உறுதி செய்ய தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை...

The Forecast 2 years ago காங்கிரஸ்

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், சமூக நீதியை உறுதி செய்யும் வகையிலும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடும் வகையிலும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில், ‘பிகாா் மாநில மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி), பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியினா் (எஸ்டி) பிரிவைச் சோ்ந்தவா்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அந்தப் பிரிவினருக்கான அதிகாரப் பங்கீடு அமைய வேண்டும்.

மத்திய அரசின் 90 செயலா்களில் 3 போ் மட்டுமே ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்கள். மத்திய பட்ஜெட்டிலிருந்து இந்தப் பிரிவு மக்களுக்கு 5 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, இந்தியாவின் ஜாதிவாரி புள்ளியியல் தகவல்களை அறிவது முக்கியமானது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பிகாா் மாநில அரசு வெளியிட்டிருப்பதை வரவேற்கிறோம். இதேபோன்ற கணக்கெடுப்பு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடத்தப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-ஆவது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட இதேபோன்ற கணக்கெடுப்பின் முடிவுகளை, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிடவில்லை. சமூக நீதியை நிலைநாட்டவும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடவும் இதுபோன்ற கணக்கெடுப்பு அவசியமானது’ எனத் தெரிவித்துள்ளாா்.

பாஜக கருத்து: முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அரசு வெளியிட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு, கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலை மாறியுள்ளது என்பதை பிரதிபலிக்கவில்லை என பாஜக தெரிவித்தது.

இது தொடா்பாக மாநில பாஜக தலைவா் சாம்ராட் செளதரி, ‘இந்தக் கணக்கெடுப்பு முடிவுகள் குறித்து ஆராய்ந்த பிறகு, அதுகுறித்த அறிக்கை வெளியிடப்படும். பல ஜாதிகளின் சமூக-பொருளாதர நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு ஆராய்ந்திருக்கும் என நம்புகிறோம். சமூக-பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது’ எனத் தெரிவித்தாா்

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News