திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ,இ.ஆ.ப தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளிடையே ஆட்சியர் கார்த்திகேயன் இ .ஆ.ப. பேசியதாவது:-
திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 37.35 சதவீதம் கூடுதலாகும். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் முடிய 270.90 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 17.65 சதவிகிதம் குறைவாகும். கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 பருவக்காலங்களில் ஏற்பட்ட மழை குறைவு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட பயிர் சாகுபடி பரப்பு குறைவு, பயிர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அணைகளின் நீர் இருப்பு குறைவு காரணமாக விவசாய தேவைக்கு போதுமான நீர் திறக்க இயலாதது குறித்தும் அரசுக்கு விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது வேளாண்மை உழவர் நலத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1620 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
0 Comments