மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் ‘புதுமைப்பெண்’ இரண்டாம் கட்ட திட்டம்
The Forecast 3 years ago திண்டுக்கல்
மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் ‘புதுமைப்பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான ஏடிஎம் அட்டை, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(08.02.2023) மூவாலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இரண்டாம் கட்ட திட்டத்தை, திருவள்ளூர் பட்டாபிராம், இந்து கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் 1,04,347 மாணவிகள் பயன்பறும் வகையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை, திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில்.இன்று(08.02.2023) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் விழா, திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கூட்டரங்கில் இன்று(08.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர் ஆகியவற்றை வழங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் .மு.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய விழாவில் 1,190 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகள் கிருத்திகா மற்றும் அபிநயா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் .இ.பெரியசாமி, அவர்கள் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தினை இரண்டாம் கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். டாக்டர் கலைஞர் அவர்களின் முயற்சியால்தான் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் கல்வி தரம் உயர்ந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கொரோனா காலத்தில் மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.
மேலும் நான் முதல்வன் திட்டம், உயர் கல்வி உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் சேர்க்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் கல்லூரி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய திருப்பமாக அதிகரித்துள்ளது.
கல்வித்தரம் உயர்ந்துவிட்டால், அது சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் மக்களின் உயர்வுக்கு வழிக்கும் என்பதை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தனியார் கல்லூரி கட்டணங்களை விட, அரசு கல்லூரியில் கட்டணங்கள் மிகவும் குறைவாகும். கல்வி உயர்வின் காரணமாக ஆண் பெண் வேறுபாடுகள் மறைந்து சமத்துவ சமுதாயம் அமைந்திடும், குறிப்பாக பெண் கல்வியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் உயர்கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லுாரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லுாரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லுாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கல்வியில் முதன்மையான மாவட்டமாக திகழும் வகையில் அனைவரும் சிறப்பாக கல்வி பயில வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் சிறப்பாக கல்வி பயின்று தங்களது கல்வி தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உயர்வழிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, முன்னோடி வங்கி மேலாளர் அருணாசலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, கல்லுாரி முதல்வர்(பொ) முனைவர் நாகநந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(சத்துணவு) திரு.சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நாசருதீன், பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments