திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள் : வாழ்வதாரம் இழந்து விவசாயிகள் தவிப்பு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும். தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகுபடி காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் நடைபெறும். இவ்வாறாக தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் திருநெல்வேலியில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இவை தவிர தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் அல்லாமல் மற்ற பாசனங்கள் திருநெல்வேலி வழியாக தென்காசி மாவட்டத்தில், கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையம், ராதாபுரம், திசையன்விளை என மற்ற பகுதிகளில் அணைகளின் நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த பெரும் மழை காரணமாக அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இது தவிர ஏராளமான குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் புகுந்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் சேதமாகி வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
0 Comments