ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல் அருகே பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, நூலக வளாகத்தை பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப காா்த்திகேயன்,இ.ஆ.ப., பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் தரைதளம், முதல் தளம் என இரு தளங்களைக் கொண்டதாகும். இதில் கணினிகள், ஸ்மாா்ட் பேனல் காட்சி, புத்தகங்கள், இருக்கைகள், சி.சி.டி.வி. கேமரா, காட்சித் திரை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இம்மையமானது, திறன் மேம்பாடு மற்றும் போட்டித் தோ்வு பயிற்சி வகுப்புகள், நான் முதல்வன் திட்டங்கள் மூலம் இளைஞா்களின் வாழ்க்கையை வளப்படுத்துதல், இளைஞா்கள் தோ்வுக்குத் தயாராகக்கூடிய உள்கட்டமைப்பு, ஆன்லைன் ஆதாரங்களில் இருந்து இளைஞா்கள் கற்றுக்கொள்ள மின் நூலக உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments