Loading . . .




கருத்து எதிரொலி ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க அண்ணாமலை முடிவா? கடும் அதிருப்தியில் பாஜ மூத்த நிர்வாகிகள்

The Forecast 3 years ago ஈரோடு

வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஈரோடு கிழக்கு தொகுதியே கரைவேட்டிகளால் களைகட்டியுள்ளது

இடைத்தேர்தல் அறிவித்த பிறகு ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் போட்டியிட ரெடியான நிலையில், வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என அதிமுக தலைவர்களுக்கு  பாஜ அறிவுரை வழங்கி வந்தது. அதேசமயம், பாஜ போட்டியிட விரும்பினால், நாங்கள் விட்டுக்கொடுக்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தும், ஈரோட்டில் செல்வாக்கு இல்லாததால் பாஜ படுதோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. எனவே, அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற இடையீட்டு மனு அடிப்படையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.


இதையடுத்து, எடப்பாடி அணி, கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற்றார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் அணியை, எடப்பாடி அணி அழைக்கவில்லை. இதனால், ஓபிஎஸ் அணி கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஓபிஎஸ் அமைதியாக இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளனர். தற்போது இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியை, பாஜ நடத்திய விதம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு எதிராக கடும் அதிருப்தி உருவாக்கியுள்ளது.


இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரசாரங்களில் பாஜவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேர்தலுக்கு ஆதரவு மட்டும் என்ற அடிப்படையில் மூத்த தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே சென்று தலையை காட்டி வருகின்றனர். மேலும் பிரசாரங்களில் கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜ கொடிகள் கூட தென்படவில்லை என்று கூறுகின்றனர். இந்த பிரசாரங்களை யார் யாரை புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், பாஜ பிரசாரம் செய்வதை எடப்பாடி பழனிசாமி அணியினர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் தான் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்கள் பிரசாரம் செய்கிறார். வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வெவ்வேறு நாட்களில் ஈரோட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வாரா மாட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஏற்கனவே, அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அவர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுடன் இலங்கைக்கு சென்றுவிட்டார்.


இந்நிலையில், அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பாஜவினர் மத்தியில் பிரஷரை ஏற்றியுள்ளது.ஏற்கனவே, இடைத்தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து கொஞ்சம் கூட இறங்கி வராத எடப்பாடி பழனிசாமியிடம் பாஜ தான் தொங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டேன் என்று அதிரடியாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பாஜவினருக்கு கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளதாம். இதனால் பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி தனியாக பிரசாரத்துக்கு செல்வாரா அல்லது அதிமுகவினரின் அதிருப்திக்கு பணிந்து பிரசாரத்தை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இடைத்தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து எடப்பாடியிடம் பாஜ தான் தொங்கிக் கொண்டு உள்ளது.


0 Comments

Post your comment here

ஈரோடு Relateted News