Loading . . .




ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

The Forecast 3 years ago ஈரோடு

குடும்பத் தலைவிகளுக்கு, மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இது இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல் என ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நாளை (27ம் தேதி) நடக்கிறது. இதில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். காலையில் சிறிது நேரம் நடந்து சென்று வாக்கு கேட்டார். பின்னர் கொளுத்தும் வெயிலில் திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வரலாற்று பெருமைக்குரிய இந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற செய்ய வேண்டும். 2021-ல் நடந்து முடிந்த தேர்தலில், இத்தொகுதியில் நமது அணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி, தொகுதி மக்களுக்காக அவையில் பேசிய பேச்சு, தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு நல்ல காரியங்கள் என இவை  எல்லாவற்றையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அவர், 46 வயது இளைஞர், மிக தீவிரமாக பணியாற்றியவர், திடீரென அகால மரணம் அடைந்துவிட்டார். அந்த சூழ்நிலையில்தான் இந்த தேர்தலை சந்திக்க  வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.

முதல்வர் பொறுப்பில் கோட்டையில் அமர்ந்தபோது, 5 கையெழுத்து போட்டு, 5 திட்டங்களை நிறைவேற்றினேன். அதில் முதல் கையெழுத்து மகளிருக்கு இலவச பேருந்து திட்டம். இதன்மூலம், பெண்கள் பெரும் தொகையை மிச்சப்படுத்தி, தங்களது குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. தமிழகத்தில்தான் நிறைவேற்றி இருக்கிறோம். ஏற்கனவே பள்ளியில் மதிய உணவு திட்டம் அமலில் இருந்தாலும், காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம்தான் நிறைவேற்றி உள்ளோம். ஒரு பள்ளியில், மாணவர்களிடம் பேசினேன்.

அப்போது, 80 சதவீத மாணவர்கள் காலையில் எந்த உணவும் சாப்பிடாமல் பள்ளிக்கு சோர்வாக வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அன்றே அதிகாரிகளை அழைத்து விவாதித்து, காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் நாம்தான் கொண்டு வந்தோம். எம்ஜிஆர் ஆட்சியின்போது ஒரு பைசா மின்கட்டணத்தை குறைக்கக்கோரி நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாய பெருங்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தடியடி நடத்தப்பட்டது. பலர் உயிரிழந்தனர். ஆனால், தலைவர் கலைஞர் 1989ம் ஆண்டு முதல்வராக பொறுப்பு ஏற்றதும் ஒருபைசாகூட தரவேண்டாம் எனக்கூறி இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.

 உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை நிறைவேற்ற 234 சட்டமன்ற தொகுதியிலும் எம்எல்ஏக்களிடம் மனுக்களை பெற்றுள்ளோம். அந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு தேகப்பயிற்சி திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தை, பத்திரிகையாளர் நலவாரியம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், பெரியார் பிறந்த நாளில் சமூக நீதி நாள் திட்டம், அம்பேத்கர் பிறந்தநாளில் சமத்துவ உறுதிமொழி ஏற்பு திட்டம், வள்ளலார் பிறந்த நாளில் தனிப்பெரும் கருணை நாள் திட்டம், கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் என எத்தனையோ திட்டம் கொண்டு வந்துள்ளோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் மூலம், தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை, திமுக ஆட்சி அகற்றி இருக்கிறது.

மாவட்டம்தோறும் புத்தக கண்காட்சி, 20 புதிய கலை அறிவியல் கல்லூரி, புதிய ஐ.டி நிறுவனங்கள், உயர்கல்வி வேலை வழிகாட்டி முகாம், புதிய வேலைவாய்ப்பு முகாம், தமிழ்நாடு பசுமை இயக்கம், சிற்பி திட்டம், போதை பொருள் ஒழிப்பு திட்டம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம், பள்ளி படிப்பு முடித்து, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றி உள்ளோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை நான் மறக்கவில்லை. நீங்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். கடந்த ஆட்சியாளர்கள் நிதி நிலையை ஒழுங்காக வைத்துவிட்டு சென்றிருந்தால், இதையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால், கொள்ளையடித்து, கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதனால்தான், இத்திட்டத்தை நிறைவேற்ற காலதாமதம் ஆகிறது.

ஆனாலும், வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது இத்திட்டம் அமல் எப்போது என அறிவிக்க இருக்கிறோம். சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம். இது, இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது, ஆட்சி முறையாக நடக்கிறதா என எடை போட்டு நீங்கள் வழங்கவேண்டிய தீர்ப்புதான் இந்த தேர்தல் நாள். தீர்ப்பு வழங்க நீங்கள் தயாராகி விட்டீர்கள். ஏற்கனவே திருமகன் ஈவேரா இந்த தொகுதியில் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 50 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான், சொல்கிறேன், அதிமுக வேட்பாளர், டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்கவேண்டும். அந்த வெற்றியை தேடித்தாருங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* நீட் தேர்வுக்கு விலக்கு  பெற்றே தீருவேன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘நீட் தேர்வு விலக்கு சட்டம், சட்டமன்றத்தில் 2 முறை நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஆனால், இதுவரை தமிழக  ஆளுனரோ, ஒன்றிய அரசோ அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால், என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவேன். அதை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.

0 Comments

Post your comment here

ஈரோடு Relateted News