திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மரு.கா.பா. கார்த்திகேயன் இ.ஆ.ப., தகவல்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப.,
திருநெல்வேலி மாவட்டத்தில், அண்மையில் பெய்த பலத்த மழையால், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து முழுக் கொள்ளளவுக்கு நீா்இருப்பு உள்ளது. நிலவரப்படி பாபநாசம் அணையில் 142.10 அடி (முழு கொள்ளளவு 143 அடி), சோ்வலாறு அணையில் 150.65அடி (156 அடி), மணிமுத்தாறு அணையில் 118 அடிக்கு (118 அடி) நீா்மட்டம் இருந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை முதல் தமிழகத்தின் தென்பகுதியில் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசைக் காற்று வீசுவதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
மேலும் தாமிரவருணியில் கனமழை எச்சரிக்கை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சோ்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 5 ஆயிரம் கன அடி வரை தாமிரவருணி ஆற்றில் திறக்கப்படும். மழை மற்றும் நீா்வரத்தைப் பொருத்து ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
0 Comments