கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது. 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதித்தனர்.
இதையடுத்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நேற்று மீண்டும் டெல்லி சென்றனர். மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அமைச்சரவை, துறை பங்கீடு ஆகியவை குறித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதில் மூத்த எம்எல்ஏக்களான பரமேஷ்வர், கே.ஹெச்.முனியப்பா, ராமலிங்க ரெட்டி, ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments