கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ரத்து - ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு
The Forecast 2 years ago கர்நாடகா
கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. எனினும், பாஜக ஆளும் பல மாநிலங்கள்கூட இதில் ஆர்வம் காட்டவில்லை; இந்த கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கெனவே நிராகரித்துவிட்டன. நாங்களும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். ஏனெனில், கர்நாடகாவில் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா அறிவு சார் மையமாக உள்ளது. நாங்கள் ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கர்நாடக மாநில மாணவர்களின் நலன் கருதி தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்னும் ஒரு வாரத்தில் ஒரு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து கர்நாடகாவுக்கு ஏற்ப மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும்" என தெரிவித்தார்.
0 Comments