சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் 927 நபர்களுக்கு ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி : கோவைமாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தகவல்
The Forecast 1 year ago கோவை
பட்டியலினம் மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரத்யேக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமாக “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர் புதிய மற்றும் ஏற்கெனவே தொழில் செய்து வருவோர் தொழிலினை விரிவாக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும். விண்ணப்பதாரர் திட்டத்தில் சொந்த முதலீட்டினை தவிர்க்கும் வகையில் தகுதியான மானியம் முன்முனை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நேரடி விவசாயம் தவிர்த்து அனைத்து வகையான உற்பத்தி, சேவை, மற்றும் வியாபாரம் சார்ந்த தகுதியான தொழில்கள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம். புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். கல்வித் தகுதி தேவையில்லை. தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் மூலம் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்குகிறது.
கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்தாண்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 55 நபர்களுக்கு ரூ.6.79 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 213 நபர்களுக்கு ரூ.27.92 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 284 நபர்களுக்கு ரூ.3.20 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 375 நபர்களுக்கு ரூ.11.79 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தம், கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் மொத்தம் 927 நபர்களுக்கு ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
0 Comments