அதிவேகமாக பேருந்துகளை இயக்கக்கூடாது : மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை
The Forecast 1 year ago கோவை
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை மேம்பாலம் அருகே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருவர் மிக வேகத்தில் சென்ற தனியார் பேருந்துகள் மோதி பலியாகினர். தொடர்ந்து அசுர வேகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அலுவலர்கள் காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது,பேருந்தின் உட்புறம் கேமரா, பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள்,முதலுதவி அம்சங்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து தனியார் பேருந்துகளின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இடையே பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் பேருந்துகளில் பயணிகள் கண்களில் படும்படி வட்டார போக்குவரத்து அலுவலரின் பெயர் செல்போன் எண்ணை பொறிக்க வேண்டும். மேலும், பேருந்தின் பேனட்டில் பயணிகளை அமர அனுமதிக்க கூடாது, செல்போன் மட்டும் ஹெட்போன்களை பயன்படுத்தி பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்கக்கூடாது. மீறினால் லைசன்ஸ் கேன்சல் செய்யப்படும். அதிவேகமாக பேருந்துகளை இயக்கக்கூடாது. பேருந்துகளில் பயணிகளை அதிகளவில் ஏற்ற கூடாது. ஏர் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது. பேருந்துகளில் அதிகளவிலான சத்தத்தில் பாடல்களை இயக்கக்கூடாது. மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து கழக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
0 Comments