மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு : மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
The Forecast 4 months ago கோவை
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மலையோரப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அணையிலிருந்து நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீரும்,மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 20,060 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி ஆற்றில் புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி , நெல்லித்துறை, ஆலங்கொம்பு, சிறுமுகை, வச்சினம்பாளையம், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தால் ஒலிபெருக்கி வாயிலாக கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments