ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு தமிழக - கேரள எல்லையில் கூட்டம் வனப்பகுதிகள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது பற்றி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன
The Forecast 2 years ago கோவை
கோவை, ஜூலை 28: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி, தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று கோவை - கேரளா எல்லைப்பகுதியான வாளையாரில் தனியார் ஓட்டலில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கும், மேலும் கண்காணிப்பை தீவிர படுத்தவும் மாநில எல்லைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கேரள மாநிலத்தில் ரேஷன் அரிசியை வாங்கும் வியாபாரிகள் பற்றிய விபரங்கள் கேட்டறியப்பட்டன. தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றத்தில் பிடியாணை பெறப்பட்ட குற்றவாளிகள் பற்றிய விபரங்கள் கேரள மாநில காவல் துறைக்கு வழங்கப்பட்டன. பஸ் மற்றும் ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் பற்றி தகவல்கள் பெறப்பட்டன. தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கேரள அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரியுடன் இணைந்து வாகனத் தணிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டன. வனப்பகுதிகள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது பற்றி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன், புட் செல் டி.எஸ்.பி கிருஷ்ணன், டி.எஸ்.ஓ பீனா, வாளையார் இன்ஸ்பெக்டர் அஜிஸ் மற்றும் வனத்துறை அதிகாரி ஆதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments