ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப.,
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார விழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை ஒழிப்பின் ஒரு அங்கமாக மனித நேய வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 24.01.2024 முதல் 30.01.2024 வரை நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற கலைப் போட்டிகள், கண்காட்சி, மத நல்லிணக்கக் கூட்டங்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், சமுதாய, பொருளாதார முன்னேற்ற சிந்தனைக் கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அனைத்து வகையான போட்டிகளிலும் மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவர்கள் அனைவரும் அதிகமான புத்தகங்களை படியுங்கள் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தையும், தேடலுக்கான விளக்கத்தையும் கொடுக்கிறது. மாணவர்கள் புத்தகங்களை படிப்பதன் மூலம் மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும், நேற்று தாட்கோ சார்பில் ரூ.9.07 இலட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகள், வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான கருவிகள், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நல வாரிய அட்டைகள் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.9,97,100/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, மனிதநேய வார விழாவினை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா.சுந்தர், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் /ஆய்வுக் குழு அலுவலர் அபிநயா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
0 Comments