சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் சுகப்பிரசவங்கள் நடைபெறும் வகையில் சுகாதாரத்துறையினரால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் தேவையான மருத்துவச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்கள் அனைத்தும் முறையாக சென்றுசேர்வதை உறுதிசெய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, 9 வட்டார அளவிலான மருத்துவமனைகள், 2 வட்டாரமில்லா மருத்துவமனைகள், 20 சமுதாய சுகாதார நிலையங்கள், 67 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 502 துணை சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வட்டாரம் வாரியாக மக்களைத்தேடி மருத்துவம், மகப்பேறு உயர்வரிசைப்பிறப்பு, இளம் வயது கர்ப்பம், கர்ப்பிணிப்பதிவுகள், மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், உயர் இரத்த அழுத்தம், வரும் முன் காப்போம் திட்டம், கண்ணொளிக்காப்போம் திட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக அத்தியாவசிய மருந்து, மாத்திரைகைள் இருப்பு குறித்தும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் நாள்தோறும் வருகைதரும் புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களுக்கான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார வாரியாக விவாதிக்கப்பட்டது. மேலும், பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட அவசரகால நோய்த்தடுப்பு மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களை ஆரம்ப காலம் முதல் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் சுகப்பிரசவங்கள் நடைபெறும் வகையில் சுகாதாரத்துறையினரால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.நந்தினி, துணை இயக்குநர்கள் மரு.ச.சவுண்டம்மாள், மரு.யோகானந்த், மரு.சுகன்யா, மரு.ராதிகா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜ்குமார், மாநகர நல அலுவலர் மரு.முரளி, வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments