சேலம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago சேலம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சேலம், குகை, மூங்கப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு பயிலும் 20,591 மாணவர்கள், 20,807 மாணவிகள் என மொத்தம் 41,398 பேர் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக, 913 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் உதவியுடன் (Scribe) தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 183 தேர்வு மையங்களில் இப்பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மேலும் தனித்தேர்வர்களாக 1,465 நபர்கள் தேர்வினை எழுதுகின்றனர்.
அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடுவதை உறுதி செய்திடும் வகையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களில் 190 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும் படை அலுவலர்கள், 3,500-க்கும் மேற்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 4,100 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments