Loading . . .




சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 90,390 பயனாளிகளுக்கு ரூ.13.91 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

The Forecast 1 year ago சேலம்

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், மரவனேரியில் புதியதாகக் கட்டப்பட்டுவரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 76,929 மாணாக்கர்களுக்கு ரூ.6.74 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13,333 மாணாக்கர்களுக்கு ரூ.6.31 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு ரூ.8.56 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 90,390 பயனாளிகளுக்கு ரூ.13.91 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களின் விடுதிகளில் ரூ.88.85 இலட்சம் மதிப்பிலான 90 பணிகளும், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 11.76 கோடி மதிப்பீட்டிலான 75 பணிகளும் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளைப் பராமரிப்பதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். அந்தவகையில், சேலம் தாட்கோ மூலமாக மரவனேரியில் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் 180 கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரவனேரியில் கட்டப்பட்டுவரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியானது தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 31 அறைகள் வீதம் ஒவ்வொரு அறையிலும் 6 மாணவர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு அறையிலும் நவீன குளியலறை மற்றும் கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விடுதியில் உள்விளையாட்டு அரங்கம், நூலகம், சமையலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவாகவும், உரிய கால அளவிலும் முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், சேலம் வருவாய் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News