Loading . . .




சேலம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.1.15 இலட்சம் மதிப்பிலான மருந்து , மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது

The Forecast 1 year ago சேலம்

சேலம் மாவட்டத்தில்  முதல்வர்  மருந்தகங்களில்  கடந்த 13 நாட்களில்  மட்டும் ரூ.1.15 இலட்சம்  மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தக செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நிறைந்தது மனம் நிகழ்வில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை குறைந்த விலையில்  வழங்கும் நோக்கோடு முதல்வர் மருந்தகத்தினை தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி -24 ம் தேதி 1,000 மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்கள். இம்மருந்தகங்கள் அனைத்திலும் 20 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு இம்மருந்தகம் மிகுந்த பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. 

மருந்து, மாத்திரைகளின் தேவைகளின் அடிப்படையில் படிப்படியாக பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகளையும் குறைந்த விலையில் விற்பனைக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதல்வர் மருந்தகங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் மட்டும் 32  முதல்வர் மருந்தகங்களில் ரூ.1.15 இலட்சம்  மதிப்பிலான மருந்து மாத்திரைகள் தள்ளுபடி விலையில்  விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு ரூ.37.4 ஆயிரம் மானியத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 16 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 32 முதல்வர் மருந்தகங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் 20% முதல் 90% வரை தள்ளுபடி விலையிலும், பிற மருந்துகளுக்கு 25% வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்படுகிறது. உதாரணமாக, சர்க்கரை நோயிற்கான மெட்பார்மின் மாத்திரை தனியாரில் ரூ.70/- என்றால் முதல்வர் மருந்தகத்தில் ரூ.11/-க்கு கிடைக்கிறது.

குறிப்பாக, தொழில்முனைவோர்கள் இம்மருந்தகத்தினை அமைத்திட ரூ.3 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் துவங்கப்படும் மருந்தகங்களுக்கு ரூ.2 இலட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. ஜெனரிக் மருந்துகளைப்பொறுத்தவரை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாகவும், இதர மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் முதல்வர் மருந்தக சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கான தமிழ்நாடு அரசின் மற்றுமொரு உன்னதமான திட்டமாக முதல்வர் மருந்தகம்  செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவைக் குறைக்கும் நோக்குடன் தரமான மருந்துகள் குறைவான விலையில் சேலம் மாவட்டம் முழுவதும் கிடைக்கும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முதல்வர் மருந்தகத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் அதிகளவில் அறிந்து பயன்பெறும் வகையில்  தேவையான விளம்பரப்பணிகள் மேற்கொள்ளவும், சேலம் மாவட்டத்தில் எந்தந்த இடங்களில் தற்பொழுது முதல்வர் மருந்தகங்கள் செயல்படுகின்றன என்பது குறித்து பொதுமக்கள் அதிகளவில் தெரிந்து கொண்டு பயன்பெறவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்புடைய துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News