“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் தொடங்கப்பட்டது
The Forecast 2 years ago சேலம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது.
பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இனி ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது,நேற்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தொடங்கியது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் நேற்றும், இன்றும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண திட்டமிட்டுள்ளனர்.
நேற்று மேற்கொண்ட பணியை போல் இன்றும் கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி அதிகாலை 6 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தெரிவித்தார்.
மேலும் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மேச்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் இடம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டு, போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் அம்மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவைப்படும் வசதிகள் குறித்து நிலை மருத்துவரிடம் கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு. அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி தி.சுவாதி ஸ்ரீ, இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) மரு.மு. வளர்மதி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.ச.சௌண்டம்மாள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments