Loading . . .




ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை த.நா. வனத்துறை அறிமுகப்படுத்தியது

The Forecast 2 years ago கோவை

வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் , அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்தர

ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை தமிழ்நாடு வனத்துறை நேற்று அறிமுகப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்தர மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சீனிவாஸ்.ரா.ரெட்டி ஆகியோர் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை வனக்கோட்டத்தில், 2021 முதல் 2023 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் யானைகள் சுமார் 9000 முறை வழிதவறி வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  எதிர்பாராதவிதமாக, 2008 முதல் ரயில்கள் மோதிய விபத்துகளில் இளம் கன்றுகள் மற்றும் இளம் யானைகள் உள்பட இதுவரை 11 யானைகள் இறந்துள்ளன. இரவு, பகல் மற்றும் அதிகாலையில் ரயில்வே வன ஊழியர்கள் மற்றும் காவலர்களை ஈடுபடுத்தி முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ரயில்வே மற்றும் வனத்துறை இணைந்து சுரங்கப்பாதைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் குறையவில்லை.  

இதற்கு பயனுள்ள தீர்வு காண, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தன்னாட்சி கண்காணிப்பு முறையில் 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து யானை வழித்தடங்களில் அறிமுகப்படுத்தி விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க அரசு முடிவு செய்தது. கள ஆய்விற்குப் பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மிகவும் பாதிக்கப்படக்கூடிய 7 கி.மீ. நீளமுள்ள ரயில் இருப்புப் பாதை கண்டறியப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பை நிறுவ அரசால் 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அதன் அடிபடையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பில், அனல் மற்றும் சாதாரண கேமராக்கள் பொருத்தப்பட்ட 12 உயரமான கோபுரங்கள், போலம்பட்டி வட்டம்-1 வனப்பகுதியில் முக்கிய இடங்களில் 500 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் யானைகள் கடக்கும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி, ரயில் பாதைகளின் இருபுறமும் 150 மீ தூரத்திற்கு முன்கூட்டியே விலங்குகளின் நடமாட்டத்தை, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் அறிய முடியும், உணரப்பட்ட சென்சார், தானாகவே வனத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படுகிறது, இது களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் செயலாக்குகிறது. வனத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், ஷிப்ட் முறையில் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனர். விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, இரயில் லோகோ பைலட்களுக்கு அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் எச்சரிக்கைகள் மூலம் தகவல்கள் உடனடியாக தெரிவிக்கின்றனர். இது தவிர, இரண்டு தடங்களிலும் ஏதேனும் விலங்கு இருந்தால் லோகோ பைலட்கள் முன்கூட்டியே பார்த்து செயல்பட டிஜிட்டல் டிஸ்ப்ளே எச்சரிக்கைகள், இரயில் தடங்களில் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விபத்துகளைத் தடுக்க வனத்துறையும், ரயில்வே அதிகாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்ட தரவுகள் விபத்துக்களை தடுப்பது மட்டுமின்றி, யானைகள் நடமாட்டம், யானைகளின் நடத்தை, தனிப்பட்ட யானைகளின் விவரக்குறிப்பு மற்றும் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களை அளிக்கிறது.

இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனக்குழு தலைவர் தீபக் ஸ்ரீவத்சவா, ஆனைமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் என்.ஜெயராஜ், தெற்கு ரயில்வே, பாலக்காடு, கூடுதல் கோட்ட இரயில்வே மேலாளர் ஜெயகிருஷ்ணன், தெற்கு ரயில்வே, கிழக்கு பாலக்காடு, கோட்டப் பொறியாளர் அன்சுல் பாரதி, தலைமை நிர்வாக அதிகாரி விஜய் கருணாகரன், ஆலோசனை உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News