ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வாழப்பாடியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.116.51 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன : டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல்
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15வது ஒன்றிய நிதிக் குழு, பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.116.51 கோடி மதிப்பீட்டிலான 4,298 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,883 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 415 பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுவேப்பிலைப்பட்டி, வேப்பிலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் திருமனூர் ஊராட்சியில் ரூ.19.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் உணவு தானிய கிடங்கு கட்டட கட்டுமான பணி மற்றும் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் செட்டி ஏரி கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையத்துடன் கூடிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தையும், திருமனூர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.8.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சத்துணவு மைய கட்டடத்தினையும், ரூ.5.78 கோடி மதிப்பீட்டில் திருமனூர் முதல் ஆயில்பட்டி வரை அமைக்கப்ப்பட்டு வரும் தார் சாலை பணியினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழப்பாடிஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
0 Comments