கோவை, அக்.27: கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4ம் முதல் மீண்டும் பணிக்கு சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது நேற்று முன் தினம் முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முன் தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நேற்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, 2வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் டன் வரை குப்பைகள் தேக்கம் அடைந்தன. வேலைக்கு வந்துள்ள தூய்மைப்பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் குப்பைகளை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே நேற்று மதியம் 12 மணி அளவில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை குறித்து 16 தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 3.30 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாட்டது. இதனை அடுத்து தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் உடன் இருந்தனர்.இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு காலை 7 மணி வரை வருகை பதிவு செய்து கையொப்பமிட அனுமதிக்கப்படும். குப்பை எடுப்பதற்கு முதல்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும். வார விடுமுறை ஒருநாள் சுழற்சி முறையில் வழங்கப்படும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இறுதி முன்மொழிவுகள் வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் அனுப்பி வைத்து, உரிய தகவல் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு தெரிவிக்கப்படும், என்றார்.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தை வாபஸ் பெறுகின்றோம். ஆனால் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மாநகராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவார்கள் என எதிர்பார்க்கிறோம், என்றார்கள்.
0 Comments