Loading . . .




காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

The Forecast 3 years ago கோவை

கோவை,அக்.30:கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு கடந்த 2006ம் ஆண்டு இலவச விவசாய நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ஆழ்துளை கிணறு வசதி ஏற்படுத்தி மின் இணைப்புடன் விவசாயம் மேற்கொள்ள தற்பொழுது முயற்சி செய்த போது, இந்த நிலத்திற்கு பட்டா வழங்கிய நிலையில், சிட்டா நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மின் இணைப்பு பெற முடியவில்லை. எனவே இந்த நிலங்களுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனவிலங்குகளால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த ஆபத்து ஏற்படுகிறது. யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதே சமயம் பெருகிவிட்ட காட்டு பன்றிகள், விவசாய பயிர்களுக்கு சேதங்களை விளைவித்து வருகிறது. இந்த காட்டு பன்றிகளை விவசாயிகள் சுட்டுக் கொல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.விவசாயிகளின் வாழ்வதாரம் காக்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் சேதமடையும் பொழுது விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இந்தக் கூட்டம் புறக்கணிக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில், கூட்டம் முடிந்த பிறகு, விவசாய சங்க நிர்வாகிகளுடன் வேளாண் துறை அதிகாரி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடைய அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரையும், விவசாயிகள் கடந்த முறை அளித்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் தெரிவிக்கும் வரையும், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வரப் போவதில்லை, கலந்து கொள்ள போவதில்லை என மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News