Loading . . .




கார் வெடித்த வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிரம்

The Forecast 3 years ago கோவை

கோவை,கோவையில் கார் வெடித்த வழக்கில் கோயில் பூசாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் 45 நிமிடம் விவரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து கைதானவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின்(29) பலியானார். இது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியதாக அவரது கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசார் முதலில் கைதான 5 பேரிடம் 3 நாட்கள் காவல் விசாரணை நடத்தி மீண்டும் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் விசாரணை நிறைவு பெற்று முழு ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ அலுவலகத்தில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையில் எஸ்பி ஸ்ரீஜித் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நேற்று முன்தினம் என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோயில் பூசாரியிடம் சில விவரங்களை கேட்டு பெற்றனர். அதில், கார் வெடித்த போது நீங்கள் கோயிலில் இருந்தீர்களா? என்ன மாதிரியான சத்தம் கேட்டது, முதலில் இதனைபார்த்தது யார்? என்பன போன்ற பல கேள்விகளை 45 நிமிடம் கேட்டு அதன் விவரங்களை பெற்றனர். தொடர்ந்து கார் வெடித்த பகுதியின் வரைபடத்தை தயார் செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக சில தகவல்களை சேகரித்து கொண்டு அங்கிருந்து என்ஐஏ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏற்கனவே 5 பேரிடம் தனிப்படை போலீசாரின் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது இந்த வழக்கு என்ஐஏ வசம் சென்றதால் சிறையில் உள்ள 6 பேரிடம் மீண்டும் விசாரிக்கவும், பல்வேறு தகவல்களை பெறவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்ஐஏ கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் படி என்.ஐ.ஏ அதிகாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments

Post your comment here

கோவை Relateted News