சேலம் புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்றையதினம் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி, வினாடி வினாப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்துரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
The Forecast 3 years ago சேலம்
சேலம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெரும் சேலம் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் கடந்த 20.11.2022 அன்று தொடங்கி வைத்தார்கள்.
இம்மாபெரும் புத்தகத் திருவிழா 20.11.2022 அன்று தொடங்கப்பட்டு 30.11.2022 அன்று வரை தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாபெரும் புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கவிதைப் போட்டி மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பம்மை இசை நிகழ்ச்சி மற்றும் ஆரோக்கிய உணவு குறித்த கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும், இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு, தினசரி பல்வேறு கருத்துரைகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் முதன்மை விருந்தினர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் "விரைந்து பாயும் வெள்ளப் புதுக்கருத்து" என்ற தலைப்பிலான கருத்துரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர் திருஇடைப்பாடி அமுதன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இரா.முருகன், கல்லூரி கல்வித்துறையின் மண்டல இணை இயக்குநர் திருமதி நா.இராமலட்சுமி மற்றும் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
0 Comments