Loading . . .




கலை வடிவில் 'எஸ்டிஜி' குறிக்கோள்கள்; மக்களை ஊக்குவித்த பிஎஸ்ஜி கல்லூரி; கவனம் ஈர்த்த ஊடகவியல் துறை மாணவர்கள்!

The Forecast 2 years ago கோவை

கோவை ,

நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs), என்பவை எதிர்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது அடையவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இது, 2016 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டுகளுக்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய பன்னாட்டு வளர்ச்சிக்கான 17 குறிக்கோள்களை உள்ளடக்கிய தீர்மானம் ஆகும். இந்த நிலையான வளர்ச்சி இலக்குகளை  அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே 'ஈகோ-எஸ்டிஜி சாம்பியன்ஷிப் 2023 (ECO-SDG Championship 2023)' என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை ஊடகவியல் துறை மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக நிலையான வளர்ச்சி இலக்குகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர்.லோகேஸ்வரி தலைமையில்  இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நிலையான வளர்ச்சிக்கான 17 குறிக்கோள்களை பிரதிபலிக்கும் வகையில் கல்லூரி வளாகத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, தூய குடிநீர் வினியோகிக்கும் இயந்திரங்கள், சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையம், சுகாதார நிலையம், பசுமை தோட்டங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் கொண்டுவர அதனை முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொரு குறிக்கோளையும் விவரிக்கும் வகையில் வாசகங்களுடன் 17 போஸ்டர்களாக உருவாக்கியுள்ளனர். குறிக்கோள்களை தெளிவாக விளக்கும் வகையில் பின்னணி குரலுடன்  காணொளிகளை மொத்தமாக ஒருங்கிணைத்து முழுமையான காணொளியாக உருவாக்கியுள்ளனர்.

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் நிலையான வளர்ச்சிக்கான 17 குறிக்கோள்களை எடுத்துக் கூறும் வகையில் பாடல் வரிகள் எழுதி இசைக் கோர்ப்பு செய்து அதற்கேற்ற பாவனைகளோடு பரதநாட்டியம் ஆடி காணொளி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஊடகவியல் துறைத் தலைவர் முனைவர்.ஜெயபிரகாஷ் தலைமையில் இந்தப் படைப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே கலந்துரையாடல் மற்றும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது மாணவர்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை மென்மேலும் விவரிக்கும் வகையில் எந்தெந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விவாதித்தனர்.

மேலும் கோவை சின்ன தடாகம் பகுதியில் அமைந்துள்ள ஊடகவியல் துறைத் தலைவர் முனைவர்.ஜெயபிரகாஷ் அவர்களது 'ரெட் வுட்' இயற்கை விவசாயப் பண்ணையில் நிலையான வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, சுகாதாரம், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, நிலவளங்களை பாதுகாத்தல் ஆகிய குறிக்கோள்களை வலியுறுத்தும் வகையில் ஊடகவியல் துறைத் தலைவர் முனைவர்.ஜெயபிரகாஷ் தலைமையில் ஸ்ரீ நேரு வித்யாலயா மற்றும் கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு தூய்மையான சுற்றுச்சூழல் உருவாக்கத்திற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் இரண்டாவது குறிக்கோளான பசி ஒழிப்பை வலியுறுத்தும் பொருட்டு பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நாளில் 75 ஆயிரம் மண் பானைகளால்  கல்லூரியின் மைதானத்தில் 75 என்ற எண் உருவாக்கப்பட்டது. இந்த மண்பானைகள் 75 மட்பாண்டம் செய்யும் கலைஞர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டவை. இதன் வாயிலாக இந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் 75 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- முத்திவீரணன் செ




0 Comments

Post your comment here

கோவை Relateted News