Loading . . .




“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமில் மனு வழங்கிய 57 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.,

The Forecast 2 years ago சேலம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் கள ஆய்வின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றும் , நேற்றும் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட 30 வருவாய் கிராமங்களிலும் தொடங்கியது. கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி அதிகாலை 6 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளுகின்றனர்.

அந்தவகையில், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆத்தூர் வட்டத்தில் மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடித் தீர்வாக 57 பேருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதேபோன்று, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடியாக தீர்வுகாணும் வகையிலான மனுக்களுக்கு 30 வருவாய் கிராமங்களுக்கும் கள ஆய்விற்குச் சென்றுள்ள அலுவலர்கள் உடனடித் தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆத்தூர் நகர்மன்றத் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தா.பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News