பதற்றமான வாக்குச்சாவடிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு அறிக்கையினை முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல்
The Forecast 2 years ago சேலம்
மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
2024 - மக்களவைத் தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற்கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு இருக்கக் கூடிய சூழ்நிலைகளை ஆராய்ந்து உரிய ஆய்வறிக்கையினை முன்னதாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் , தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்வதுடன், தங்களுக்கு கீழ் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்த பயிற்சியினை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வழங்கப்படும் வாக்குப்பதிவிற்குத் தேவையான வாக்குச்சாவடிப் பொருட்களை முறையாக வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒப்படைப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வைப்பு அறைகளுக்கு முறையாக கொண்டு செல்லுதல், வாக்குச் சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் (சேலம்), அம்பாயிரநாதன், (சங்ககிரி) ந. லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆர்.லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் உட்பட மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments