சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு தகவல்
The Forecast 2 years ago சேலம்
கோடை விடுமுறை முடிந்து, வரும் 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம், மணக்காடு, காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
2024ஆம் ஆண்டுக்கான கோடை விடுமுறை முடிந்து 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1,567 அனைத்து வகை அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,396 செயல்பட்டு வருகின்றது. பள்ளிகள் திறக்கப்படும் தேதிக்கு முன்னர், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளிகளில், மாணவ, மாணவிகள் புத்துணர்வுடனும், சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழலிலும் கல்வி பயில ஏதுவாக அனைத்து தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் சேலம், மணக்காடு, காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும், மழை காலம் என்பதால் பள்ளி வளாகங்களில் டெங்கு கொசுக்கள் ஏதும் உற்பத்தியாகாத வகையில் தேவையான சுகாதார வசதிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின் சாதனங்கள் பாதுகாப்பான முறையில் முழுமையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், பள்ளிகளின் மேற்கூரையில் நீர் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, பழைய கழிவுப் பொருட்கள் ஏதேனும் இருப்பின் அதனை முறையாக அகற்றிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. கபீர், பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.அனந்தலட்சுமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments