சேலம் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
The Forecast 2 years ago சேலம்
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தலைமையில் 19.06.2024 மற்றும் 20.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் வகையில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கள ஆய்வின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, இன்றையதினம் காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டத்தில் தொடங்கியுள்ளது. தலைவாசல் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது. தலைவாசல் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் 1.30 மணி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
மேலும், பகல் 2.30 மணி முதல் 4.30 வரை தலைவாசல் வட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொது மக்களுடனான கலந்துரையாடலும், மாலை 6 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.
கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி இன்றைய தினம் அதிகாலை 6 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர். முன்னதாக, தலைவாசல் வட்டம், காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப்பிரிவு, மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள், விஷ முறிவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்திடவும், வருகை தரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்திடவும் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.
மேலும், காட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவமுறை குறித்து கேட்டறியப்பட்டு, கோமாரி நோய் தடுப்பூசி வழங்கும் பணியினையும், பால் உற்பத்தி, மாடுகளுக்கு சினை பிடித்தல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் இறப்பு ஆகியவற்றை குறித்தும் கேட்டறியப்பட்டது. காட்டுக்கோட்டை நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான எடையில் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து, சமையறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும், குறித்த நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் பரிமாறப்படுவது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப்பட்டது.
மணிவிழுந்தான் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் மணிவிழுந்தான் நியாயவிலைக்கடையினையும், பால் கொள்முதல் நிலையத்தினையும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி,இ.ஆ.ப., தலைவாசல் வட்டாட்சியர் அன்பு செழியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments