சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.1,148.97 கோடி எய்தப்பட்டுள்ளது : டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல்
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு முகவர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் சிறுசேமிப்பு முகவர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டமானது அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் கடந்த 4 ஆண்டுகளாக மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.2,287 கோடி வசூல் சாதனையை சேலம் மாவட்டம் எய்தியுள்ளது. தற்போது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரை ரூ.1,148.97 கோடி எய்தப்பட்டுள்ளது.
இதில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களின் சேவை மிகவும் இன்றியமையாததாகும். படித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் மற்றும் ஆண்கள் சுய வேலைவாய்ப்பாக அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் பணியினை செய்து வருகின்றனர். தற்பொழுது படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் மகளிருக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 11 மகளிருக்கு சிறுசேமிப்பு முகவர் பணி நியமன ஆணைகள் மற்றும் 6 நபர்களுக்கு முகவர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற மக்களையும் சிறுசேமிப்புத் திட்டத்தில் இணைத்திட ஏதுவாக ஊராட்சி ஒன்றிய அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் படித்து வேலைவாய்ப்பில்லாத மகளிரை அஞ்சலக சிறுசேமிப்பு முகவராக நியமனம் செய்து, அவர் மூலமாக சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்களையும் அஞ்சலக ஆர்.டி சேமிப்பு கணக்கை துவங்கி பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments