உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதில் கிராமப்புற நூலகங்களில் உள்ள பொது நூலகத்தின் பங்கு இன்றியமையாதது : டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.,
The Forecast 1 year ago சேலம்
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையால் நூலக பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஆர். ஜெகநாதன் முன்னிலையில் சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையால் பொது நூலகப் பணியாளர்களுக்கான 45வது திறன் மேம்பாட்டுத் திட்டம் சேலம், பெரியார் பல்கலைக்கழக நூலகத்தில் இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் நூலகப் பணியின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். நூலக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் பற்றி விவாதிக்கவும், ஊக்குவிக்கவும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
நூலகர் மற்றும் நூலகத்தில் பணியாற்றுபவர்கள் அமைதியான சூழலில், அதிக நேரம் புத்தகங்களுடன் இருப்பவர்கள். மேலும், புத்தக அனுபவம் அதிகமாகவும் மற்றும் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாகவும் உள்ளனர். படித்த சமுதாயத்தினை உருவாக்குவதில் நூலகர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த நூலகத்திற்குச் செல்ல வேண்டும். உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதில் கிராமப்புற நூலகங்களில் உள்ள பொது நூலகம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொது நூலக வல்லுநர்கள் சுமார் 60 பங்கேற்பாளர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். அடுத்த 5 நாட்களில் நவீன தகவல் தொழில்நுட்பத் திறன், நூலக ஆட்டோமேஷன் மென்பொருள், நூலக மேலாண்மை, பாதுகாத்தல் ஆகியவற்றுடன் சமுதாயத்திற்கு தரமான நூலக சேவைகளை வழங்குவது குறித்து நூலக வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார், பெரியார் பல்கலைக்கழக நூலகர் முனைவர் ம. ஜெயப்பிரகாஷ், பல்கலைக்கழக நூலகம் மற்றும் அறிவியல் துறைத்தலைவர் முனைவர் சி.முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments