“பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்
The Forecast 1 year ago சேலம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கென தனி கவனம் செலுத்தி திட்டங்களைச் செல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கென மாதம் ரூபாய் 1,000/- வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியை உறுதிப்படுத்தவும்“பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுத்தல், ஆண், பெண் பிறப்பு விகித சமநிலையை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் சமூக நலத்துறையின் திட்டங்கள் பற்றிய தெருக்கூத்து நிகழ்ச்சிகளும், “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், விழிப்புணர்வு பிரச்சார வாகனமும் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்விழிப்புணர்வு பிரச்சாரமானது 27.02.2025 வரை பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் ரா.கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் . ஸ்ரீமுரளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments