Loading . . .




கோவை மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டால் வீடு, விவசாய கட்டுமான பணிகள் பாதிப்புபல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ.20 கோவை மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பணிகள், விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை மாவட்டம் அழைக்கப்படுகிறது. கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள், பல நூறு பெரிய அளவிலான தொழிற்சாலைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகள், ஜவுளி நிறுவனங்கள், விவசாய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் போன்றவைகள் இயங்கி வருகின்றன. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில் நிமித்தமாக வந்தும் செல்கின்றனர். கோவை மாவட்டத்தின் வளர்ச்சி காரணமாக இங்கு பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தொழிலில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு உள்ளது எனவும், விலைகள் உயர்ந்து காணப்படுகிறது எனவும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து கட்டிட தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, தனி நபர் வீடு கட்டுதல், தொழில் நிறுவனங்கள் கட்டிடங்கள், விவசாய பணிகளுக்கான கட்டுமான பணிகள் என நாள்தோறும் வேலை இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. பின்னர் அதுவும் குறைந்து தற்போது வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வேலை உள்ளது. கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வே இதற்கு காரணம்.

தனியார் கட்டுமான பணிகள் மட்டுமல்லாமல் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கும் இதுவே நிலை. செங்கல் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. அப்படியே கிடைத்தால் அதிக விலையில் கிடைக்கிறது. இதனால் கட்டிட தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுமான தொழிலை காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி விவசாயம், தென்னை விவசாயம், பயிர் விவசாயம் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்கின்றன. விவசாய பணிகளுக்காக பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. தட்டுப்பாட்டால் தற்போது அந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: கோவை மாவட்ட வளர்ச்சி குறித்தும், நீர்நிலைகள் பராமரிப்பு குறித்தும், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர் பல ஆண்டுகளாக கோவையிலேயே பணிபுரிந்து வருவதால் பலரும் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கல்வி மற்றும் மருத்துவம் உலக அளவில் சிறப்பாக உள்ளதால் பலரும் இங்கே குடியேற விரும்புகிறார்கள். அதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் அபரா வளர்ச்சி காரணமாக விவசாய தொழில்களும் பெருகியுள்ளன. விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளது.

விவசாய நிலங்களில் குட்டைகள் அமைத்தல், கிணறுகள் அமைத்தல், தண்ணீர் தொட்டி அமைத்தால், சுற்றுச்சுவர் அமைத்தல் என பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் செங்கல், மணல் போன்ற கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் செங்கல் கிடைத்து வந்த நிலையில் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்துதான் செங்கல் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

செங்கல் உற்பத்தியில் விதிமுறைகளை பின்பற்றாமல் ஈடுபட்டதால் மாவட்டத்தில் பல்வேறு செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. வெளி மாவட்டம் செங்கல்கள் விலை அதிகமாக உள்ளது. இதனால் கூடுதல் நிதி சுமைகள் ஏற்படுகிறது. கட்டுமான பணிகள் தடைப்படுவதால் கட்டிட தொழிலாளர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தட்டுப்பாட்டை போக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

___

0 Comments

Post your comment here

கோவை Relateted News