Loading . . .




மங்களூர் குண்டுவெடிப்பு குற்றவாளி கோவை லாட்ஜில் 3 நாள் தங்கினார்தனிப்படை போலீசார் விசாரணை

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ. 23: மங்களூர் குண்டுவெடிப்பு குற்றவாளி கோவை லாட்ஜில் 3 நாட்கள் தங்கியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடி குண்டு வெடித்தது. ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முகமது ஷாரிக் பயன்படுத்திய சிம்கார்டு கோவையில் வாங்கியது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த சிம்கார்டு சில நாட்களுக்கு முன் புதிதாக பெறப்பட்டதாக தெரிகிறது.

ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் (28) என்பவரின் பெயரில் சிம்கார்டு பெறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டி போலீசார் சுரேந்திரனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேந்திரன் கோவை சிங்காநல்லூரில் தங்கி இருந்து தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலை செய்து வந்துள்ள விவரம் தெரியவந்தது. இவர் அடிக்கடி காந்திபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்று மதுபானம் குடித்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் சுரேந்திரன் அந்த விடுதியில் தங்கி இருந்தபோது பக்கத்து அறையில் முகமது ஷாரிக் தங்கி இருந்துள்ளார். அவர் சுரேந்திரனிடம் செல்போன் கேட்டு வாங்கி சிலரிடம் பேசியுள்ளார். தன்னிடம் செல்போன் இல்லை என சுரேந்திரனிடம் முகமது ஷாரிக் கூறியுள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், முகமது ஷாரிக் சிம்கார்டு வாங்க உதவி கேட்டார். சுரேந்திரன் தனது ஆதார் கார்டு தந்து சிம்கார்டு வாங்க உதவியுள்ளார்.

முகம்மது ஷாரிக் கோவையில் புதிய சிம்கார்டு வாங்கிய பின்னர் புதிதாக செல்போன் வாங்கி பேசி வந்துள்ளார். பின்னர் அவர் கோவையில் இருந்து மதுரை சென்றுவிட்டார். அங்கே ஒரு நாளும், நாகர்கோவிலில் 2 நாளும் தங்கியுள்ளார். அவர் தமிழகத்தில் தங்கி இருந்தபோது யாரையெல்லாம் சந்தித்தார்?, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது?, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையிலிருந்து தனிப்படை போலீசார் மங்களூர் சென்றனர். அங்கே முகமது ஷாரிக்கின் கோவை வருகை, அவரின் சந்திப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூருக்கு சுரேந்திரனையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். மங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் கோவை வந்து, முகமது ஷாரிக் தங்கிய பகுதிகளில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக சிம்கார்டு விற்ற செல்போன் கடைக்காரர், லாட்ஜ் நிர்வாகிகள், லாட்ஜ் அருகே வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முகமது ஷாரிக் லாட்ஜில் யாரை சந்தித்தார்?, வாங்கிய செல்போனில் யாரிடமெல்லாம் பேசினார்?, என்ன தகவல்கள் பறிமாறப்பட்டது? என்ற விவரங்களை செல்போன் கால் லிஸ்ட் மூலமாக பெற முயற்சி எடுத்துள்ளனர். மேலும் சுரேந்திரன் செல்போன் மூலம் முகமது ஷாரிக் யார் யாரிடம் பேசினார்? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. /

0 Comments

Post your comment here

கோவை Relateted News