கடைத்தெருக்களில் அதிகரிக்கும் கூட்டம் பறக்கும் படைகளை மீண்டும் களமிறக்க முடிவு
The Forecast 3 years ago கோவை
கோவை, டிச.31: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைகளை மீண்டும் களமிறக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் கடந்த கொரோனா காலக்கட்டத்தில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கண்காணிக்க பறக்கும் படைகளை மீண்டும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பறக்கும் படைகளை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த முறை 20 பறக்கும் படை குழுக்கள் அமைத்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது,’’ என்றார்.
இதே போல் ஊட்டி நகராட்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளிலும் கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.
___
0 Comments