ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தங்கள், கார்ப்புரேட்டுகளுக்கு முன்னுரிமை : இந்தியாவில் வேலையின்மை அதிகரிக்க காரணம் தொழில்முனைவோர்கள் புகார்
The Forecast 3 years ago கோவை
கோவை, ஜன.3 இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலையின்மை சதவீதம் முந்தைய நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக இருந்ததுள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.96 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.44 சதவீதமாக சரிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஜிஎஸ்டி, கார்ப்புரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை, உலக அளவில் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்கள் முதன்மையாக சொல்லப்படுகின்றன. மேலும் இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு இந்தியா மிகப்பெரிய சவாலை சந்திக்க நேரிடும் என தொழில்முனைவோர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
நாளுக்கு நாள் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஜாப் ஆர்டர்கள் குறைவு, சீனா, பிரிட்டன், தாய்வான், ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் 60 சதவீதம் வரை உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளை பெரிய தொழில் நிறுவனங்கள் தாக்கு பிடிக்கலாம். சிறிய நிறுவனங்கள் தாக்குபிடிக்காது. 1990 முதல் 2005ம் ஆண்டு வரை அனுபவம் கொண்ட பல பேர் புதிய தொழில்களை தொடங்கினார்கள். தொழிற்கல்விகளான ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்டவைகளை படித்தும் சிலர் தொழில்களை அதிக அளவில் தொடங்கி வந்தனர். ஆனால் தற்போது புதிய தொழில்கள் தொடங்குவது மிகவும் குறைந்துள்ளது. 16 மணி நேரம் வேலை இருந்து வந்த சூழ்நிலையில் 8 மணி நேரம் வேலை இருப்பதே பெரிய விசியமாக கருதப்படுகிறது. இதன் காரணத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டிபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழில்நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை 80 சதவீதம் வரை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பல்வேறு நிறுவனங்களில் வேலை வழங்கும் நாட்கள் குறைந்துள்ளன. இது போன்ற காரணங்களினால் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:
2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்தே வேலை வாய்ப்பு என்பது சிறுக சிறுக குறைந்து கொண்டே வந்தது. இப்போது இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. மிக பெரிய தொழில் நிறுவனங்கள், கார்ப்புரேட்டுகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கம் சிறு, குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் தான் வழங்கி வருகின்றன. ஜிஎஸ்டி, வரி சீர்திருத்த கொள்கைகளால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. எந்த நடவடிக்கைகளும் பயன் தரவில்லை. கார்ப்புரேட்டுகளுக்கு மட்டுமே தொழில் ரீதியான அனைத்து ஊக்கங்களும் தரப்பட்டன. சிறு, குறுந் தொழில்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே தங்களது தொழில் நிறுவனங்களை மூடி வருகின்றனர். மாபெரும் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த திருப்பூர் பனியன் நிறுவனங்கள் இன்று மூடுவிழாக்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. அனைத்து தரப்பு தொழில்முனைவோர்களையும் அரவனைத்து சென்றால் மட்டுமே இதில் இருந்து தீர்வு கிடைக்கும். இனியும் தாமித்தால் இனி வரும் நாட்களில் வேலையின்மை என்பது அதிகரித்து கொண்டே தான் செல்லும். மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தங்களில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஸ்கில்டு லேபர்களை உருவாக்க வேண்டும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments