நியூசிலாந்தின் பொருளாதாரம் வெளித்துறையை பெரிதும் நம்பியுள்ளது' நியூசிலாந்து புதிய பிரதமர் இந்திய உடனான நட்புறவை வலுப்படுத்துவார் தொழில்முனைவோர்கள் நம்பிக்கை
The Forecast 3 years ago கோவை
‘
கோவை, ஜன. 27: நியூசிலாந்தின் பொருளாதாரம் வெளித்துறையை பெரிதும் நம்பியுள்ளது. தற்போது உள்ள நியூசிலாந்து பிரதமர் இந்திய உடனான நட்புறவை வலுப்படுத்தி இந்தியா - நியூசிலாந்து இடையே வர்த்தகம் அதிகரிக்கவே உதவுவார் என தொழில்முனைவோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ஜெசிந்தா அடர்ன் அறிவித்ததை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டன் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். \"நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் என்னால் முடியாது. எனது சக்தி தீர்ந்துவிட்டது,\" என அவர் கூறியிருந்தார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டார்.
ஜெசிந்தாவின் அமைச்சரவையில் கிறிஸ் ஹிப்கின்ஸ் அமைச்சராக இருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் கோவிட்-19 துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். காவல்துறை, கல்வி, பொது சேவை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார். தற்போது நியூசிலாந்தின் பிரதமராக நேற்று முன் தினம் பதவியேற்றுள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடாக நியூசிலாந்து உள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா இந்தியாவுடன் நல்ல நட்புறவை கொண்டிருந்தார். நியூசிலாந்துக்கு இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அப்போது அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்க தயாராக உள்ளது. புத்துணர்ச்சி பெறவும் உள்ளது. இரு நாடுகளின் நமது பிரதமர்கள் நரேந்திரமோடி மற்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு பார்வை, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை பலப்படுத்துகிறது. அதிக தொழில்கள் செய்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எந்தவொரு உறவுக்கும் வணிகம் நல்லது. வணிகம், டிஜிட்டல், விவசாயம், கல்வி, திறன்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. விவசாய-வணிகத் துறையில் கூட்டாண்மைக்கு வரும்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நிறைய வாய்ப்புகள் உள்ளன. வலுவான ஒத்துழைப்பு அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும். கிரிக்கெட்டில் உள்ள ஒத்துழைப்பு சிறந்த உதாரணமாக உள்ளது,\" என்றார்.
இதனிடையே நியூசிலாந்து அரசாங்கத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டு நிறுவனமான நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் நிறுவனமானது இந்தியாவுடனான தனது பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. பல நியூசிலாந்து வணிகங்கள் இந்தியா முழுவதும் உள்ள கடைக்காரர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகளை வழங்கியுள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளன. நியூசிலாந்தின் பிரீமியம் மற்றும் உயர்தர மளிகை, பால் பொருட்கள் மற்றும் சில்லறை தயாரிப்புகளை அதிகரிப்பதே இந்த வர்த்தகத்தின் நோக்கமாகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகைக் கடையுடன் இணைந்து இந்த தயாரிப்புகள் நுகர்வுக்கு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நியூசிலாந்து பிராண்டுகளின் தயாரிப்பு சலுகைகள் இந்திய சந்தையில் பல புதிய நகரங்களில் கிடைக்கும். மேலும் புதிய பழங்கள், பிரீமியம் இறைச்சி மற்றும் கடல் உணவுகள், பால் பொருட்கள், செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் போன்ற தயாரிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவுடனான அந்நாட்டின் உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணையக்கூடிய வலுவான, நிலையான தளத்தை உருவாக்கவும் நியூசிலாந்து தயாராக உள்ளது. இதன் மூலம் இந்திய நுகர்வோருக்கு நியூசிலாந்து தனது சலுகைகளை விரிவுபடுத்தம். அதே போல் இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் மற்றும் பொருளாதார ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு இந்த உறவு மிகவும் அவசியமாக உள்ளது. இந்தியர்கள் பலரும் நியூசிலாந்தில் தொழில்செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதியதாக பதிவியேற்றுள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இந்தியா உடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தவே விரும்புவார் என நம்நாட்டு தொழில்முனைவோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நம்நாட்டு தொழில்முனைவோர்கள் கூறுகையில், \" நியூசிலாந்து அரசாங்கம் எப்போதும் உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான வர்த்தக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது. சர்வதேச வணிகங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்கிறது.
இந்தியாவில் 1.2 பில்லியன் மக்கள்தொகையில் பாதி பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். 300 மில்லியன் பேர் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரை உள்ளடக்கியதாகவும் உள்ளனர். இது இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை, குறிப்பாக உணவு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, உற்பத்தி மற்றும் சேவைகள் மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் அதிகரிக்க உதவும். இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் சுமார் டாலர் 1 பில்லியன் அளவில் உள்ளது. இந்தியா நியூசிலாந்தின் 18வது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்த வேண்டும் . இந்திய தொழில் கூட்டமைப்பு உடன் இந்திய நியூசிலாந்து வணிக கவுன்சில் இடையே கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும். நியூசிலாந்தின் பொருளாதாரம் வெளித்துறையை பெரிதும் நம்பியுள்ளது. தற்போது உள்ள நியூசிலாந்து பிரதமர் இந்திய உடனான நட்புறவை வலுப்படுத்தி இந்தியா - நியூசிலாந்து இடையே வர்த்தகம் அதிகரிக்கவே உதவுவார்,\" என்றனர்.
0 Comments