Loading . . .




நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சாலை பணிகளுக்கு ரூ.50 கோடி நிதி :மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தகவல் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

The Forecast 3 years ago கோவை

கோவை, ஜன. 31: கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற கூட்டம் இன்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில்  கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டை அமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியினில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்யும் மையம், 2  நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்த வளாகத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் மேல்நிலைத் தொட்டி சுமார் 300 மீட்டருக்கு மதில் சுவர் இல்லாமல் உள்ளது.  அதனால் இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.  எனவே மதில் சுவர் அமைக்க ரூ. 36 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 தீர்மானங்கள் மீது விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பேசுகையில், " கோவை மாநகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ரூ. 250 கோடி வரி வசூல் இலக்கை எட்டிவிடுவோம். ஒரே மாதத்தில் ரூ.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் ரூ.4.50 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு  வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.50 கோடி நிதி விரைவில் மாநகராட்சிக்கு வர உள்ளது. சாலை பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும்," என்றார்.

இக்கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசுகையில், " மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வளர்ச்சி பணிகள் தரமானதாகவும், விரைவாக மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினர்கள் நியாமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தரப்படும்," என்றார்.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், " டிடைல் பார்க் பகுதிகளை சுற்றி ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

26 வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில், "  கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பொருளாதார பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் காரணத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் ஆகவே உடனடியாக அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆசிரியர்களை நியமனம்  செய்ய வேண்டும்.  கோவை மாநகராட்சி அனைத்து பொது கழிப்பிடங்களும் கடந்த டிசம்பர் 31ம் தேதி முதல் ஜன.10 ஆம் தேதி வரை சுத்தம் செய்யப்படாமல் புதிய ஒப்பந்ததாரர் யார் என்று தெரியாமல் பழைய ஒப்பந்ததாரர் பணிக்கு வராமலும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டார்கள். இது போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதிய ஒப்பந்ததாரர் பணியை துவங்குவதற்கு வரும் வரை பழைய ஒப்பந்ததாரர் முழுமையாக இருந்து பொதுமக்களுக்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

இக்கூட்டத்தில் துணை கமிஷனர் ஷர்மிளா, மண்டல அளவிலான அனைத்து துறை அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News