கோவை, பிப். 11: கோவையில் பசுமைதாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில் நொய்யலாறு மீட்பு கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவையின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் நொய்யலாற்றை மீட்க, பசுமை தாயகம் அமைப்பு கையில் எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக கடந்த மாதம் 11ம் தேதி கோவையில் நொய்யல் மீட்பு கருத்தரங்கம் பசுமை தாயக அமைப்பின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நொய்யலாறு மீட்பிற்கான கலந்துறையாடல் கூட்டம் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்துறையினர், விவசாயிகள், சமுக ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், குளங்கள் பாதுபாப்புகுழுக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் நொய்யலை மீட்டு எடுப்பது குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஒரு முழுமையான நொய்யல் மீட்பு அறிக்கை தயாரிக்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய செளமியா அன்புமணி, "நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பசுமை தாயகம் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது, தொடர்ந்து பயணிப்போம். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நீர் நிலைகள் சுற்று சூழல் பாதிப்புகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். நீர் ஆதாரங்கள் மீட்பு திட்டங்களையும் துவக்கி வைத்து வருகிறார். 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தந்தார். தற்போது நொய்யலை மீட்க அனைவரும் ஒன்று கூடியுள்ளோம் அனைவருடனும் சேர்ந்து தொடர்ந்து பயணித்து நொய்யலை மீட்போம்," என்றார்.
0 Comments