மாநகராட்சிக்கு வரி பாக்கி அதிமுக முன்னாள் எம்.பி. வணிக வளாக கடைகளுக்கு சீல்
The Forecast 3 years ago கோவை
கோவை, பிப். 23 கோவை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளதாக, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் வணிக வளாகத்தில் 15 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
2022 - 2023 நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கோவையில் நீண்ட காலமாக சொத்துவரி,காலியிட வரி, தொழில்வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலியவற்றை நிலுவைகளில் வைத்துள்ளவ்வர்களின் பெயர்கள் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டு நோட்டீஸ் அளித்து எச்சரிக்கை விடுக்கும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோட்டீஸ் வழங்கப்பட்டும் வரி செலுத்தாத கடைகள், கட்டடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு சொந்தமான வணிக வளாகம், கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு உணவகம், துணிக்கடை, அலங்காரப் பொருள்கள் கடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி, இந்த வணிகவளாகத்தில் உள்ள கடைகள் மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருந்ததாகவும், நோட்டீஸ் அளித்தும், வரித்தொகை செலுத்தப்படாததாலும் 5 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, வரித்தொகை செலுத்தப்பட்ட பிறகு, மீண்டும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதே வணிகவளாகத்தில் வரி செலுத்தாத மீதமுள்ள கடைகளுக்கு சீல்வைக்கும் நடவடிக்கைகள் நேற்று மாலை முதல் மேற்கொள்ளப்பட்டன. இதில், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் உதவி வருவாய் அலுவலர் கர்த்திகேயன் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வரி நிலுவைத்தொகை உள்ளதாகக் கூறப்படுகிறது.
0 Comments