கோவை, மார்ச் 4: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வ.உ.சி பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில், மாநகராட்சி நிர்வாகம் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறது. நீர்நிலை சீரமைப்பு பணி என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. கரைகளை அழகாக்க, பூங்கா அமைக்க, வாக்கிங், ஸ்கேட்டிங் தளம் அமைப்பதில் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. உக்கடம் குளக்கரையில் ஒரு பகுதியில் முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. படகு சவாரிகளும் துவங்கப்பட்டுள்ளன. மக்கள் பயன்பாட்டிலும் உள்ளது.இக்குளம், 4.7 கி.மீ சுற்று பரப்பளவில் இருக்கிறது. குளத்தில் 12 மீட்டர் ஆழம் தூர் வாரி சீரமைக்க வேண்டியுள்ளது. உக்கடம் பெரியகுளத்தை தொடர்ந்து வாலாங்குளத்தின் கரைகளும் ரூ.40 ேகாடிக்கும் அதிகமான தொகையில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக ரூ.23 கோடி மதிப்பில் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 ேகாடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த குளங்களை தொடர்ந்து நரசாம்பதி, கொலராம்பதி, செல்வாம்பதி, சிங்காநல்லூர், குறிச்சி குளங்களை சீரமைப்பு பணிகள் சுமார் ரூ,200 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே வாலாங்குளத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளின் விவரம், மதிப்பீடு, முடிக்கப்படும் தேதிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments