Loading . . .




முதல் தடவை தவறு செய்து சிறை வரும் கைதிகள் மனதில் மாறுதல் ஏற்படுத்தும் சிறை நூலகம் 10 ஆயிரம் புத்தகம் தானமாக கொடுத்த மக்கள்

The Forecast 3 years ago கோவை

சிறைவாசிகள் திருந்தி வாழ உதவும் புத்தகங்கள்  

கோவை, மார்ச் 29: கோவை மத்திய சிறைச்சாலை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை 1872 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியின் போது கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது . சிறைச்சாலையில் 2,208 கைதிகள் தங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1908 முதல் 1910 வரை சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள திறந்தவெளி நிலத்தை கைதிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். சிறையில் உள்ள நூலகம் சிறை கைதிகளால் பெரும் அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மத்திய சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி கற்க வகுப்பறைக் கல்வி வசதி உள்ளது. சிறை ஆசிரியர்கள் மூலம் தினமும் மூன்று மணி நேரம் பாடம் சொல்லித்தரப்படுகிறது. இதன் மூலம் சிறையிலிருந்து கைதிகள் வெளியேறும்போது இக்கல்வி அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பையும் தருகிறது. அதேபோல் இசை கற்க முன்வருபவர்களை சிறை அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் இசை கற்க சிறை கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும் சிறையிலிருந்து சுமார் 20 சிறை கைதிகள் மூலம் கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் பங்க் செயல்பாட்டில் உள்ளது. பெட்ரோல் பம்புகளை இயக்கி வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது, பண மேலாண்மை முதல் எரிபொருள் விநியோகம் வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் கைதிகள் கையாளுகின்றனர். கைதிகளின் இத்தகைய முயற்சிக்கு அவர்களுக்கு தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கைதிகளின் சீர்திருத்தத்திற்கு உதவுகிறது. மேலும் கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறை நெசவு பிரிவு உள்ளது. 109 விசைத்தறிகள் கொண்ட நெசவு அலகு உள்ளது, இதில் 200 தண்டனை கைதிகள் இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறைசாலையை சீர்திருத்த சாலையாக மாற்ற “ கூண்டுக்குள் வானம்” என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கோவை மத்திய சிறைக் கைதிகளுக்கு திருப்பூர் புத்தக திருவிழா மூலம் 5 ஆயிரம் புத்தகங்கள் தானமாக கிடைத்தன. இதுதவிர தற்போது சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கிலும் புத்தக தானம் பெற “கூண்டுக்குள் வானம் ” திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது போன்ற திட்டங்களினால் 10 ஆயிரம் புத்தகங்கள் தானமாக கிடைத்துள்ளன.இது குறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறியதாவது: காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் பூஜாரி வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டரின் உதவியால் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான “கூண்டுக்குள் வானம்” என்னும் புத்தக தான மேடை அமைக்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் சிறைவாசிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையை சீர்திருத்த சாலையாக மாற்றும் இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மத்திய சிறைச்சாலையில் ஏற்கனவே 4 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் 100 புத்தகங்கள் மாவட்ட நூலகத்தில் இருந்து சுழற்சி முறையில் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கிலும் புத்தக தானம் பெற “கூண்டுக்குள் வானம் ” திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கோவை மத்திய சிறையில் உள்ளன.புத்தகங்களை விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் படிக்கின்றனர். இது அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துக்கின்றது. குறிப்பாக 18 வயது முதல் 25 வயதில் உள்ள கைதிகள் மற்றும் முதல் தடவை தவறு செய்து சிறை வரும் கைதிகள் ஆகியோருக்கு கவுன்சிலிங் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. மீண்டும் அவர்கள் எக்காரணம் கொண்டும் சிறை வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் இடமாக சிறை நூலகம் உள்ளது. புத்தகங்கள், கவுன்சிலிங் நடவடிக்கையால் மனம் திருந்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சிறையில் இருந்து வெளியே செல்வோர் நடவடிக்கைகளிலும் இது உணர முடிகிறது. பிரபல டிக்டாக் பிரபலம் பெண் ஒருவர் சிறையில் இருக்கும் போது அவருக்கு கவுன்சிலிங் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. புத்தகங்கள் படித்தார். அவர் இங்கிருந்து செல்லும் போது அவருக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தேன். அவர் வெளியே சென்றதும் மீண்டும் தவறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதனை நாம் பார்க்க முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார். சிறைச்சாலைகளுக்கு புத்தகம் தானமாக தரப்படும் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. சூழ்நிலைகளால் குற்றம் செய்வோர் மனம் திருந்தி மீண்டும் மறுவாழ்வு பெற புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை அதிக அளவில் இது போன்று கொடுத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.___

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News