கோவை, ஏப். 2 கோவை மாநகராட்சியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, வடவள்ளி } கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆழியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட குறிச்சி, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் நகரையொட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழியார் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடை காலம் நிலவுவதால், சிறுவாணி அணையில் நீர் இருப்பு குறைந்து, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி நீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் பில்லூர் மற்றும் வடவள்ளி } கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால், ஆழியாறு அணையிந் நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஆழியாறு அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆழியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி நீருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தினமும் குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவர் தனலட்சுமி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments