கோவை, ஜூலை1: கோவை மாவட்ட கலெக்டர்g அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரக பணியாளர்களின் குழந்தைகளுக்கான குழந்தைகள் பகல் நேர காப்பகத்தினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த காப்பகம் தனியார் பள்ளி துணை முதல்வர் கண்காணிப்பில் அதன் ஆசிரியர் ஒருவரால் வழிநடத்தப்படவுள்ளது. பாடத்திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்படும்.
இந்த காப்பகத்தில் சிறுகுழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பணியாளர்களின் அலுவலக பணிநேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் அவர்களின் குழந்தைகள் இங்கு பாதுகாப்பாக நன்றாக கவனித்துக்கொள்ளப்படுவர்கள். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆரம்ப கட்ட கல்வியினையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத்தர ஆசிரியர் உள்ளார். இதனால் பணியாளர்கள் குழந்தைகள் பற்றி கவலையின்றி நிம்மதியாக பணியாற்றலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணி அலுவலர் முருகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments